நேற்று (13.09.2015) சென்னை இக்சா மையத்தில் நடந்த "முத்தரையரும் மீனவரும்" என்ற தலைப்பிலான கருத்தரங்கில் இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் சார்பாக கலந்து கொண்டு நான் பேசியதன் எழுத்து வடிவம்.
"முத்தரையர் மீனவர் கூட்டமைப்பு" ஏற்பாட்டில் "முத்தரையரும் மீனவரும்" என்ற தலைப்பிலான கருத்தரங்கில் என்னை கருத்துரை வழங்க அழைத்த அனவருக்கும் எனது முதல்கண் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வில் பங்கேற்று இருக்கக்கூடிய பெரியவர்கள், இளைஞர்கள் அனைவருக்கும் நன்றியினை உரித்தாக்கி..
இது "முத்தரையரும் மீனவரும்" என்ற கருத்தரங்கம் இதில் எனக்கு முன்பு பேசிய அனைத்து தலைவர்களும் இருவரும் ஒருவரே என்று பல்வேறு வரலாற்று செய்திகள் மூலம் நிறுபித்தார்கள், ஆக நான் வரலாற்றையே தொடர விரும்பவில்லை, சொல்லியிருக்கும் வரலாறே போதுமானதாக இருக்கும் என்று கருதுகிறேன். நாம் நடைமுறையை கொஞ்சம், அரசியலை கொஞ்சம் பேசுவோம்.
இன்றைக்கு பட்டினவர், பரதவர், முக்குவர், கரையர், கடையர், வலையர், மரக்காயர் என்று 20 சாதிகளாக 13 மாவட்டங்களில் திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி கன்னியாக்குமரி நீராடிவரையுள்ள 1096 கி.மீட்டர் கடற்கரையில் 608 கிராமங்களில் வாழ்ந்தாலும் இவர்கள் அனைவருக்கும் ஒரே பொதுப்பெயர் "மீனவர்" என்பதே..
இந்தியாவின் வரலாற்றை எப்போது எழுதினாலும், குறிப்பாக தமிழகத்தின் வரலாற்றை எழுதும்போது "பூர்வீககுடிகள்" என்று குறிப்பிட வேண்டுமானால் அது இந்த 20 சாதியாய் பிரிந்து நிற்க்கும் மீனவர் சமூகத்தைதான் முதலில் குறிப்பிட வேண்டும்.
அவ்வளவு தொன்மையான ஒரு சமூகம் எங்கே தோற்றுபோனது..? எது அவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது..? என்பதை நாம் ஆராய வேண்டும்.
20 சாதியாய் பிரிந்து நிற்கிறோம் என்று சொன்னேன் அல்லவா..? அங்கிருந்துதான் நம்முடைய அரசியல் தோல்விகள் தொடங்குகின்றது, 13 கடற்கரை மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சமூகமாக, அதேபோல சமவெளி பிரதேசங்களில் வாழும் இதர முத்தரையர்கள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்ககூடிய தொகுதிகளின் எண்ணிக்கையும் 50 தாண்டும் ஆக ஆட்சி அமைக்கக்கூடிய அளவிற்க்கு பெரும்பாண்மையை பெறக்கூடிய ஒரு சமூகம் பிளவுபட்டு நிற்பதால் ஒன்றும் இரண்டுமாய் "கடமைக்கு" சட்டமன்றத்துக்குள் சென்று கொண்டு இருக்கிறோம். இப்படி நாம் அரசியலில் நமக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க தவறியதில் இருந்துதான் நம்முடைய அரசியல் தோல்வி தொடங்குகின்றது.
இன்றுவரை 600 மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றும், ஒரு சின்ன சலசலப்புக்கூட எழவில்லை என்றால் அதற்க்கு காரணமும் இந்த அரசியலை நாம் புரிந்துக்கொள்ள மறுப்பதுதான். நமக்கான அரசியலை எவனோ எதற்க்கு செய்ய வேண்டும்..? என்றாவது அவன் சுடும்போது மட்டும் "சும்மா" போராடி கலைந்து செல்பவர்களை நம்பி, நம்பி நாசமாய் போய்கொண்டு இருக்கிறோம்.
மீன் பிடிப்பது நாம், முத்துகுளிப்பது நாம், உப்பை விளைவிப்பது நாம்... ஆனால் இதையெல்லாம் சந்தைப்படுத்துபவன் எவன்..? உயிரை பணயம் வைத்துதானே கடலுக்கு போகிறோம், கடலுக்குள் போகும்போது உடலோடு உயிராய் போறவன், சில சமயம் வெறும் உடலாய் கரை திரும்புகிறானே..? அவன் நம்மில் ஒருவன் இல்லையா..? எனக்கு கடல்தாய் எப்போது எல்லை வகுத்தாள்..? எல்லைதாண்டினோமாம், சுட்டுக்கொல்வானாம்.., இந்தியா சுதந்திரம் அடைந்து 68 வருடமாகிறது, மீனவன் சுதந்திரத்தை இழந்தும் அதே 68 வருடங்கள்தான் ஆகிறது.
வருடத்திற்க்கு எத்தனையோ ஆயிரம் கோடி அன்னிய செலவானியை இந்த நாட்டுக்கு தருபவனுக்கு இவன் என்ன செய்தான்..? எதுவும் இல்லை, ஏன் சட்டமன்றத்திற்க்கோ, நாடாளுமன்றத்துக்கோ சிலரேனும் செல்ல ஒரு இடஒதுக்கீட்டை தந்தால் என்ன குடியா முழுகிவிடும்..? அவனாக கண்டிப்பாக தரமாட்டான், ஏன் தர வேண்டும்..? தராமலே நம்முடைய உரிமைகளை பறித்துக்கொடுக்க இங்கு ஆயிரம் தரகர்கள் இருக்கிறார்கள்.
நம்முடைய சமூகங்களோடு இணக்கமாய் இருப்பதாய் பாசங்கு காட்டுபவன் தான் நம்முடைய பொருளாதாரத்தை, உழைப்பை சுரண்டுகிறான், இன்னும் சிலர் நம்முடைய அரசியலை சுரண்டுகிறான், கடல்தாயின் மடியில் பிறந்த நமக்கு அவள் எப்போதும் குறைவற்ற வளங்களை அள்ளி அள்ளி தருவதுபோலவே நாமும் நம்முடைய உரிமைகளை, அரசியல் அதிகாரங்களை நம்மை வஞ்சித்து பிழைப்பவனிடம் தந்துவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
சமீபத்தில் ஒரு செய்தி ஒரு மீனவ சங்க தலைவரை தூத்துக்குடியில் வெட்டிக்கொன்றதாக செய்திதாள்களில் படித்தேன், வெட்டியவர்கள் வேறு யாரும் அல்ல அவர்களும் மீனவர்கள்தான், ஏன் வெட்டிக்கொன்றார்கள்..? படகு முதலாளிகளின் விருப்பத்திற்காக, அவர்களின் கெளரவத்திற்காக..? எப்படி மூளை மழுங்கடிக்கப்பட்டு இருக்கிறோம் புரிகிறதா..? நம்முடைய கையை வைத்தே நம்கண்ணை குத்தும் லாவகங்கள் அனைத்தையும் எதிரி மிகச் சரியாகவே செய்கிறான் நாம் புரிந்துக்கொள்ளவே மறுக்கிறோம்.
கடல்வளத்தை பெருமுதலாளிகள் எப்படி சுரண்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான், நாம் எப்படி கடலை நேசிக்கிறோம், அதனோடு எப்படியான உறவினை பேணுகிறோம் என்பதற்க்கு சமீபத்திய உதாரணம்தான் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகானத்தில் இயங்கும் கடல்சார் ஆய்வு மையம் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாத்தமைக்காக ராமேஷ்வரத்தை சேர்ந்த அக்கா லெட்சுமிக்கு விருது வழங்கி கெளரவித்து இருக்கிறது, அந்த விருதோடு 6 லட்ச ரூபாய் பணபரிசும் கொடுக்க இருக்கிறது. இப்படிதான் நாம் கடலை நேசிக்கிறோம்.
இப்போதெல்லாம் கடற்கரை காத்து வாங்க வருபவனுக்கும், நிலங்களை வளைத்துப்போட்டு ரிசார்ட்ஸ் நடத்துபவனுக்கும், நல்ல நிலங்களை தோண்டி இரால் வளர்ப்பவனுக்கும் சொந்தமாகிகொண்டு இருக்கிறது, பூர்வகுடியோ இப்போதும் எனக்கென்னவென்று கடலாடுகிறது..
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக