கனிமொழி பிரசாரம்: கருணாநிதி திட்டம் பலிக்கும் ?
தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் பிரதானமாக இருக்கும் இரண்டு ஜாதியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து, அ.தி.மு.க.,வை ஆதரித்து வருகின்றனர். இதனால், அந்த பகுதிகளில் அ.தி.மு.க., தொடர் வெற்றி பெற்று வருகிறது. இதனால், வட மாவட்டங்களில் பிரதானமாக இருக்கும் வன்னிய இனத்தவரையும் டெல்டா மாவட்டங்களில் பிரதானமாக இருக்கும் முத்தரையர் இனத்தவரையும் தி.மு.க., பக்கம் திருப்புவதற்கு, கருணாநிதி திட்டமிடுகிறார். இதற்கு பின்புலமாக இருந்து, புள்ளி விவரங்களை கட்சியின் மாநில மகளிர் அணி செயலர் கனிமொழி திரட்டிக் கொடுப்பதால், அவரை, அப்பகுதிகளில் தீவிர பிரசாரத்துக்கு அனுப்புவதன் மூலம், நல்ல பலன் கிடைக்கும் என, கருணாநிதி நம்புகிறார்.
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: வட மாவட்டங்களில், பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் இனத்தவருக்கு, தி.மு.க., ஆட்சி காலத்தில், வழங்கப்பட்ட சலுகைகள், இது நாள் வரையில், தி.மு.க., அந்த சமூகத்தவருக்கு அரசியல் ரீதியில் கொடுத்த முக்கியத்துவம் குறித்தெல்லாம் நிறைய விவரங்கள் திரட்டப்பட்டு உள்ளன. அதே போலவே, முத்தரையர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள், கட்சி ரீதியில் வழங்கப்பட்ட முக்கியத்துவம் குறித்த விவரங்களை, கனிமொழி திரட்டிக் கொடுத்துள்ளார். இதனால் கனிமொழியை, அப்பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்ய வைக்க திட்டமிட்டு உள்ளனர். வட மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க., சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள், வன்னியர் இனத்தவராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுமாறும், கட்சித் தலைமைக்கு கனிமொழி வலியுறுத்தி உள்ளார். அதையும் இம்முறை செயல்படுத்த கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. அதேபோலவே, டெல்டா மாவட்டங்களில் உள்ள முத்தரையர் இனத்தை பிரதானப்படுத்தி, வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளனர். இதற்காக, தேர்தலுக்கு முன்பாக, இந்த பகுதிகளில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் திண்ணைப் பிரசாரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், அடுத்த மாதம் 23ம் தேதி முத்தரையர் வம்ச அரசர் பெரும்பிடுகு முத்துராஜாவின் பிறந்த தினம் வருகிறது. அந்நாளில், திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு, கனிமொழியை மாலை அணிவித்து மரியாதை செலுத்தும்படியும் கருணாநிதி கூறியுள்ளார். இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -
Source : http://www.dinamalar.com/news_detail.asp?id=1235551
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக