தடையை மீறி ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கத்தை, சாதி பெயரை சொல்லி இழிவாக பேசியதாக அமைச்சர் விஜயபாஸ்கரை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக முத்தரையர் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.
இதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது.
ஆனால் இந்த தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முத்தரையர் சங்கத்தினர் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக நேற்று காலையில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா முன்பு திரண்ட முத்தரையர் சங்கத்தினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து முத்தரையர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற வீர முத்தரையர் சங்க மாநில தலைவர் செல்வகுமார் உள்பட 1000 பேரை கைது செய்து புதுக்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
விரட்டியடிப்பு
இதற்கிடையில் ஆர்ப்பாட்டம் நடத்த வந்தவர்கள் சின்னப்பா பூங்கா பகுதியில், அமைச்சர் விஜயபாஸ்கரின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். புதுக்கோட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தின் மீது சிலர் கல் வீசி தாக்கினார்கள்.
கல் வீசி தாக்கியவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரட்டியடித்தனர். அந்த பகுதியில் பாதுகாப்பிற்காக மேலும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
சாலை மறியல்
இதைப்போல புதுக்கோட்டை அருகே உள்ள மேட்டுப்பட்டியிலும் அமைச்சர் விஜயபாஸ்கரை கண்டித்து முத்தரையர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
திருவரங்குளம் காட்டுப்பகுதியில் உள்ள சாலையின் ஓரத்தில் இருந்த பழமை வாய்ந்த மரத்தை முத்தரையர் சங்கத்தினர் வெட்டி சாலையில் போட்டனர். மேலும் ஆங்காங்கே கட்டைகளை வைத்து சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டதால், மாற்றுப்பாதையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.
கீரமங்கலம் பகுதியில் உள்ள புளிஞ்சங்காடு, கைகாட்டியில் உள்ள பட்டுக்கோட்டை-புதுக்கோட்டை சாலையில் முத்தரையர் சங்கத்தினர் உருவ பொம்மையை எரித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 1,200 பேர் கைதாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
News Source : தினதந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக