முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அருகே அதிமுக பிரமுகரின் தம்பி சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டார். கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் அவரது சடலம் கிடந்தது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் வடகாட்டை சேர்ந்தவர் மதன்(44). இவரது அண்ணன் ஜெகன் அதிமுக ஒன்றிய கவுன்சிலராகவும், தொகுதி அதிமுக இணை செயலாளராகவும் உள்ளார். இவர்கள் அமைச்சர் காமராஜின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.நேற்று இரவு மதன் முத்துப்பேட்டை கடைத்தெருவுக்கு வந்தார். பின்னர் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். சித்தேரி குளத்தை தாண்டி புனித அந்தோணியார் கோயில் அருகில் சென்றபோது, பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது.மதன் நிலைகுலைந்து கீழே விழுந்தார். காரில் இருந்த இறங்கிய கும்பல் அவரை விரட்டியது. மதன் பைக்கை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடினார். மர்ம கும்பல் அவரை விரட்டி சென்றது.
அதன் பின்னர் அவரது கதி என்ன ஆனது என தெரியவில்லை. தகவலறிந்த அவரது உறவினர்கள் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தை நள்ளிரவில் முற்றுகையிட்டனர்.உடனடியாக மதனை கண்டுபிடிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். தகவலறிந்த தஞ்சை டிஐஜி செந்தில்குமார், நாகை எஸ்பி அபிநவ்குமார், ஏடிஎஸ்பிக்கள் தஞ்சை ராஜேந்திரன், திருவாரூர் முத்தரசு மற்றும் ஆயிரக்கணக்கான போலீசார் முத்துப்பேட்டையில் குவிந்தனர்.தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் பல இடங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் மதனை பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.இன்று அதிகாலை அவரது பைக் அனாதையாக கிடந்த இடத்தின் அருகில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்திற்குள் சென்று பார்த்தபோது, மதன் சடலமாக கிடப்பது தெரிய வந்தது.
அவரது தலை, கழுத்து, கால், கை உள்பட உடலின் பல இடங்களில் வெட்டு விழுந்து இருந்தது. தலையே இல்லாத அளவுக்கு சரமாரியாக வெட்டியுள்ளனர். காரில் இருந்து இறங்கிய கும்பலிடம் இருந்து தப்பிக்க மதன் தேவாலயத்தின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்துள்ளார்.இந்நிலையில் சேற்றில் சிக்கி கொண்ட அவரை கும்பல் சூழ்ந்து கொண்டு சரமாரியாக வெட்டியது விசாரணையில் தெரிய வந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன் கோவிலூர் மணல்மேட்டை சேர்ந்த வீரபாண்டியன்(35) என்பவர் குளத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது வெட்டி கொல்லப்பட்டார்.
இவ்வழக்கில் மதன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவர் முன் ஜாமீன் பெற்று வெளியில் இருந்து வந்தார். எனவே வீரபாண்டியன் கொலைக்கு பழிக்கு பழியாக மதன் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மதனின் அண்ணன் ஜெகன் முத்துப்பேட்டை போலீசில் கொடுத்த புகார் மனுவில், கோவிலூரை சேர்ந்த ராஜேஷ், சரவணன், வினோத், இளஙகோவன், மந்திரமூர்த்தி, அய்யப்பன், செல்வராஜ், உப்பூரை சேர்ந்த சுதாகர், ஆலங்காட்டை சேர்ந்த மனோகர், மருதங்காவெளியை சேர்ந்த மாரிமுத்து ஆகியோரது பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சந்தேகத்தின்பேரில் 2, 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து முத்துப்பேட்டையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
News Source : http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=84841
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக