அமைச்சருக்கு எதிராகக் களம் இறங்கும் சமூகத்தினர்
‘‘தீபாவளி பட்டாசு வாங்க இரண்டு பேர் கடைக்குப் போறாங்க. அங்கேயிருந்த பட்டாசுக் கடை பேரு திருக்குவளை. அங்கே ஒரு ராக்கெட் வெடி இருந்தது. அதோட பேரு 2ஜி ராக்கெட். விலை, 176. ‘இது எப்படி வெடிக்கும்?’னு கேட்டாங்க. ‘இது கூட்டு ராக்கெட். இத இங்கே பத்த வெச்சா.. ஜோடியா பறந்து போயி திகார் ஜெயில்லதான் வெடிக்கும்!’ என சொன்னார் கடைக்காரர். வேற கடைக்குப் போறாங்க. அந்தக் கடைக்குப் பேரு கோயம்பேடு பயர் ஒர்க்ஸ். இந்தக் கடையை மச்சான் இன்சார்ஜ்ல விட்டுட்டு ஓனர் ரவுண்டுக்குப் போயிட்டார்’’ - சட்டசபையில் விஜயபாஸ்கர் சொன்ன கதை இது. கருணாநிதியைத் ‘தள்ளு வண்டி’ என்றும், விஜயகாந்தை ‘தண்ணியிலே இருப்பவர்’ என்றெல்லாம் விஜயபாஸ்கர் பேசிய பேச்சுக்கள் அவருக்கு அமைச்சர் பதவியை வாங்கி கொடுத்தது. ஆனால், அதே பேச்சால் ‘மாண்புமிகு’வை இழந்துவிடுவார் போல. ‘எங்கள் சமூகத்தினரை இழிவாகப் பேசினார்’ என அவருடைய அலுவலகத்தை முற்றுக்கையிட்டு, கிடுகிடுக்க செய்திருக்கிறார்கள் முத்தரையர் சமூகத்தினர்.
‘முத்தரையர் சமூகத்தை விமர்சித்த அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடு’ என திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன முத்தரையர் அமைப்புகள். விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி கார்டனுக்கு அனுப்பப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்தில் குதித்தனர். திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து திரண்டு வந்திருந்த முத்தரையர் சமூகத்தினர் புதுக்கோட்டை பி.யு.சின்னப்பா பூங்கா எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘போராட்டத்துக்கு அனுமதி இல்லை’ என எச்சரித்தது போலீஸ். இரண்டு தரப்புக்கும் வாக்குவாதம் முற்ற, ஒரு கட்டத்தில் அ.தி.மு.க அலுவலகத்தை முற்றுகையிடக் கிளம்பினர்கள் முத்தரையர்கள். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, தடியடியில் முடிந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை எறியத் தொடங்கினர்கள். அ.தி.மு.க அலுவலகத்தையும் கற்களை வீசி சேதப்படுத்தினர். போலீஸ் தடியடி நடத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கைதுசெய்தது. மோதல் சம்பவம் காட்டுத்தீயாக மாவட்டம் முழுவதும் பரவியது. புதுக்கோட்டையின் பல இடங்களில் முத்தரையர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பிரச்னைக்குக் காரணம் என்ன?
கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய சேர்மன் கெங்கையம்மாளும் அவரது கணவர் சொக்கலிங்கமும் விவரிக்கிறார்கள். ‘‘அமைச்சர் விஜயபாஸ்கர் மிகவும் தரக்குறைவாக, கண்ணியமற்ற முறையில் எங்களை நடத்தினார். எங்கள் ஊருக்குக் கல்யாண மண்டபம் கட்டித் தருவது, நலத்திட்டங்கள் வழங்குவது குறித்த கோரிக்கைகளோடு கடந்த வாரம் இலுப்பூரில் உள்ள அமைச்சர் வீட்டுக்கு ஆறு கவுன்சிலர்கள் உட்பட சிலருடன் போனோம்.
ரொம்ப நேரம் காக்க வைத்துவிட்டு, என்ன நினைத்தாரோ, எல்லோர் முன்னிலையில் ‘நீயெல்லாம் ஒரு ஆளுன்னு உன்கூட நாலுபேர் சேர்ந்து வர்றாங்க? கூட்டம் சேர்த்துக்கிட்டு இருக்கியா?’ ’’ என்றவர் ‘‘சாதி பெயரை சொல்லி ‘எல்லாம் ஒன்றுகூடி என்ன எதிர்க்க பார்க்குறீங்களா? ஏற்கெனவே என்னை திருச்சியில் எதிர்த்தவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டனர். உன்னை எல்லாம் ஒரு நிமிடத்தில் காணாமல் செய்துவிடுவேன். கட்சியைவிட்டே உன்னைத் தூக்கிவிடுவேன். அரைமணி நேரத்தில் அட்ரஸ் இல்லாமல் செய்துவிடுவேன். அன்னவாசல், கொத்தமங்கலம், அறந்தாங்கி போன்ற இடங்களில் கூட்டம் போட்டது எல்லாம் எனக்குத் தெரியாது என்று பார்த்தியா? நீங்க என்ன கூட்டம் போட்டாலும் என்னை அசைக்க முடியாது’ என்றார்.
அப்படி கூட்டம் எல்லாம் போடவில்லை. சமுதாயக் கூட்டங்கள்தான் போட்டோம் என்றோம். ‘என் முன்னாடியே நின்னு பேசிக்கிட்டு இருக்கியா? போய்யா இந்த இடத்தைவிட்டு’ என்று அசிங்கமாகத் திட்டினார். அதனால் அமைதியாக வந்துவிட்டோம்.’’ என்றார்கள்.
இந்த சம்பவம்தான் பிரச்னைக்குப் பிள்ளையார் சுழி போட்டதாம். அதுதான் போராட்டம், தடியடி வரை வந்து நின்றிருக்கிறது. அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘விஜயபாஸ்கர் இப்படி பேசுவதை வழக்கமாகக் வைத்திருக்கிறார். அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் பதவிகளில் இருப்பதால் பலரும் பொறுத்துக் கொண்டிருந்தார்கள். கட்சியில் முத்தரையர் சமூகத்தினருக்கு பொறுப்புகள் வழங்காமல் இருந்தது முணுமுணுப்புகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் இருவர், எம்.பி ஒருவர் ஆகியோர் இதை கையில் எடுத்திருக்கின்றனர். விஜயபாஸ்கரை வீழ்த்தியே தீருவோம் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்” என்றனர்.
போராட்டத்தை முன்நின்று நடத்திய செல்வக்குமார், ‘‘அ.தி.மு.க. – தி.மு.க. ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளும் முக்குலத்தோர் சமூக மக்களுக்கு மட்டுமே முன்னுரிமை தருகின்றன. அ.தி.மு.க-வில் அதிக அளவில் முக்குலத்தோர் மாவட்டச் செயலாளர்களாக, மந்திரிகளாக இருந்து வருகின்றனர். இதனால் பிற சமூக மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எல்லோருக்கும் சம வாய்ப்புகள் தரவேண்டும். எங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை இல்லையென்றால் அடுத்த கட்டமாக களத்தில் இறங்குவோம்” என்றார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் என்ன சொல்கிறார்? ‘‘சாதியைச் சொல்லி திட்டியதாகப் பிரச்னை செய்கிறார்கள். நான் அப்படி சொல்லவே இல்லை. அன்று என்னுடன் தாசில்தார், இணை இயக்குநர், விவசாயத் துறை அதிகாரிகள் உடன் இருந்தார்கள். நான் தவறாகப் பேசவில்லை என்பதற்கு அவர்களே சாட்சி’’ என்றார்.
- சண்.சரவணக்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக