
திருச்சி: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளராக, ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வும், முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளருமான பரஞ்ஜோதி அறிவிக்கப்பட்டுள்ளார். திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும், தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராகவும் இருந்த மரியம்பிச்சை, பெரம்பலூர் அருகே சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் இறந்தார். இதையடுத்து காலியான திருச்சி மேற்கு சட்டசபைத் தொகுதிக்கு, வரும் அக்டோபர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது என்று, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. வரும் 19ம் தேதி, இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட எந்தக் கட்சியும், கட்சியினரிடமிருந்து விருப்ப மனு வாங்காமல் இருந்தது. நேற்று காலை, திடீரென திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில், முன்னாள் எம்.எல்.ஏ., பரஞ்ஜோதி போட்டியிடுவார் என்று கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்டது.
மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பரஞ்ஜோதிக்கு, 51 வயதாகிறது. இவருடைய சொந்த ஊர், திருச்சி மாவட்டம் எட்டரை கிராமம். முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த இவருடைய மனைவி பரமேஸ்வரி. மகள் மதுமிதா பி.இ., படிக்கிறார். மகன் அழகன், கேம்பியன் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். எம்.ஏ., பி.எல்., படித்துள்ள பரஞ்ஜோதி, மூன்றாண்டு வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார்.
கடந்த 1972ம் ஆண்டு முதல், அ.தி.மு.க.,வில் இருக்கும் பரஞ்ஜோதி, 1988 முதல் 1994ம் ஆண்டு வரை, ஏழாண்டு மாவட்ட துணைச் செயலராகவும், 1994 முதல் 1996ம் ஆண்டு வரை, மாநகர் மாவட்ட இணைச் செயலராகவும், 1996ம் ஆண்டு முதல் 2000ம் வரை, மாநகர் மாவட்டச் செயலராகவும், 2004 முதல் 2006ம் ஆண்டு வரை, திருச்சி புறநகர் மாவட்டச் செயலராகவும் கட்சிப் பொறுப்பு வகித்துள்ளார். கடந்த 1996ம் ஆண்டு, ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதியிலும், 2004ம் ஆண்டு திருச்சி எம்.பி., தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்த பரஞ்ஜோதி, 2006ம் ஆண்டு ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனார். கடந்த, 2004 முதல் 2006ம் ஆண்டு வரை, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் வாரிய சேர்மனாக பொறுப்பு வகித்தார். தற்போது, முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற, ஸ்ரீரங்கம் தொகுதியின் பொறுப்பாளாக இருந்து வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக