தி.மு.க., இளைஞரணி மாவட்ட, மாநகர அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளருக்கான நேர்காணல், இரண்டு மாதங்களாக, கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அனைத்து மாவட்டங்களுக்கும், சமீபத்தில் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பதவி அறிவிக்கப்பட்டது. இந்த நியமனம், எல்லா மாவட்டங்களிலும், தி.மு.க.,வில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்ட ஆனந்த், சென்னையில் நடந்த நேர்காணலில் பங்கேற்கவே இல்லை. கடந்த சட்டசபை தேர்தலில், ஸ்ரீரங்கம் தொகுதியில், தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டு, தோல்வியடைந்தவர். நேருவின் தீவிர ஆதரவாளர் என்பதால், நேர்காணலில் பங்கேற்காத நிலையிலும் ஆனந்த், மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது, திருச்சி மாவட்ட, தி.மு.க., இளைஞரணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியையும், புகைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தி.மு.க.,வினர் கூறியதாவது: கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆனந்த்துக்கு, சீட் கொடுத்த போதே, கட்சியில் புகைச்சல் கிளம்பியது. தேர்தலுக்கு பின் நடந்த போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் போன்றவற்றில் ஆனந்த் பெரும்பாலும் பங்கேற்கவில்லை. மாவட்டத்தில், முத்தரையர் சமுதாயத்தில் பலமான நபரை, உடன் வைத்துக் கொள்ள நேரு திட்டமிட்டு, நேர்காணலுக்கு வராத ஆனந்த்துக்கு, மாவட்ட அமைப்பாளர் பதவியை வாங்கிக் கொடுத்துள்ளார். அப்போது தான், மாவட்டத்தில், எதிர்கோஷ்டியாக உள்ள முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் செல்வராஜ், மணிகண்டம் ஒன்றிய செயலாளர் பழனியாண்டி ஆகியோருக்கு ஈடுகொடுக்க முடியும் என்று நினைக்கிறார். இவ்வாறு தி.மு.க.,வினர் கூறினர்.
இதுகுறித்து ஆனந்த் தரப்பில் விசாரித்த போது, நேர்காணலுக்கு ஏன் செல்லவில்லை என்று, தி.மு.க., தலைமையிடம் கடிதம் கொடுத்து விட்டதாக, கூறப்பட்டது.
NEWS FROM : DINAMALAR
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக