
மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி அடுத்தடுத்து ஆளும் தி.மு.க.வுக்கு எதிராக ஆர்ப்பாட¢டங்களை நடத்திவரும் ஜெயலலிதா... அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடும் காவல்துறையைக் கண்டித்து, பட்டுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட¢டம் என அறிவித்தார்.
அறிவித்த சில நாட்களிலேயே அதிரடியாக ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்யுமாறு ஜெயலலிதா உத்தரவிட, பட்டுக்கோட்டை அ.தி.மு.க.வினரிடையே குழப்பத் தீ!
ஆர்ப்பாட்ட அறிவிப்பு... ஆர்ப்பாட்ட ரத்து... இதற்கு இடையே என்ன நடந்தது என அ.தி.மு.க.வின் சீனியர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் ஒன்றியச் செயலாளராக இருப்பவர் துரை.செந்தில். இவர் கழக பணியாற்றாமல் அடிதடி, கட்ட பஞ்சாயத்து, கூலிக்கு ஆள் அனுப்புவது, கட¢சியில் கழக பொறுப்பாளர்கள் நியமனத்தில் பணம் வசூலிப்பது என கட்சிக்கு விரோதமான போக்கில் செயல்பட்டு வந்தார்.
இதனாலேயே இவர் ஒன்றியச் செயலாளராக உள்ள மதுக்கூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க. வசமிருந்த சேர்மன் பதவி பறிபோய்விட்டது. மதுக்கூர் காவல்நிலையத்தில் ரவுடிகள் லிஸ்டில் இவரது பெயர் முதலில் உள்ளது. மாஜி அமைச்சர் ஆலங்குடி வெங்கடாசலம் கொலை வழக்கில் காவல்துறை இவரை விசாரணைக்கு அழைத்தது. அப்போது காவல் துறைக்கு ஒத்துழைக்காமல், காவல்துறை தன் மீது பொய் வழக்கு போட முயற்சிப்பதாக புகார் கூறினார். மேலும், எங்கள் தலைமைக்கு உண்மைக்கு புறம்பான தகவலைச் சொல்லி தனக்கு நெருக்கமான மன்னார்குடி வகையறாக்களின் முக்கிய புள்ளியின் மூலம் பட்டுக்கோட்டையில் 21.11.2010 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அம்மாவிடம் தேதி வாங்கிவிட்டார்.

இந்த அறிவிப்பைக் கண்டதும் அ.தி.மு.க.வில் பெரும்பகுதி வாக்காளர்கள் உள்ள முத்தரையர் சமுதாயத்தினரும், அ.தி.மு.க.வின் முத்தரையர் அனுதாபிகளும் அதிர்ச்சி அடைந்தனர். செந்திலின் சுயநலத்துக்காக கட்சியின் பெயரில் நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தால் அ.தி.மு.க.வுக்கு முத்தரையர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் நிலைமை உருவானது.
இதையடுத்து கட்சி பொறுப்பில் உள்ள முத்தரை-யர்கள் அம்மாவுக்கும், கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளுக்கும் புகார் மனுக்களை அனுப்பினர். இதையடுத்து விசாரணையில் இறங்கியது தலைமை. உண்மை நிலைகளைத் தெரிந்து கொண்ட ‘அம்மா’ ஆர்ப்பாட¢டத்தை ரத்து செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்’’ என்று சொல்லி முடித்தனர்.
மேலும், ‘‘பட்டுக்-கோட்டையில் மெகா சைஸில் வைக்கப்பட்டிருந்த பிளக்சில் அம்மா பேரவை இருப்பதுபோல, துரை.செந்தில் பேரவை என்று வைக்கப்பட்டிருக்கிறது. இது கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் செயல். மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் பதவியிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் செந்திலை நீக்கவேண்டும்’’ என்றும் தலைமைக்கு புகார்களை அனுப்பி வருகின்றனர் அ.தி.மு.க.வினர்.
ஆலங்குடி வெங்கடாசலம் கொலை வழக்கு குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண¢டும் என ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்கத்தின் பொதுச்செயலாளர் மூர்த்தியிடம் பேசினோம்.
‘‘எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த 75 சதவிகிதம் பேர் அ.தி.மு.க.வையே ஆதரிக்கிறோம். ஆனால், அ.தி.மு.க.வால் தொடர்ந்து எங்கள் சமுதாயம் அழிந்து கொண்டுதான் வருகிறது. வாக்களிக்க மட்டுமே முத்தரையர்களை பயன்படுத்திக் கொள்ளும் அ.தி.மு.க., எங்கள் சமுதாயத்தைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் கொலை, முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கத்தோடு செய்யப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்டவரும் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான சந்திரசேகர் இரங்கல் கூட்டத்துக்கு வந்து 3 மணி நேரம் இருந்து விட்டுச் சென்றார். ஆனால், அ.தி.மு.க.வைச் சேர்ந்த லோக்கல் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள் என யாருமே வரவில்லை. தா.கிருட்டிணன் கொலை வழக்கை பற்றி அடிக்கடி பேசும் ஜெயலலிதா, வெங்கடாசலம் கொலை பற்றி பேசவேயில்லையே ஏன்? தொடர்ந்து முத்தரையர்களைப் புறக்கணித்து வரும் அ.தி.மு.க.வுக்கு இந்த முறை வாக்களிக்க போவதில்லை’’ என்றார் ஆவேசமாக.
இத்தனை குற்றச்சாட்டுகளின் பின்னணியாக கருதப்படும் செந்திலை அவரது செல்போனுக்கு பல முறை தொடர்பு கொண்டும் ‘சுவிட்சுடு ஆப்’ என்ற பதிலே கிடைத்தது.

இதுபற்றி, தஞ்சை மாவட்ட அ.தி.மு.க.வின் செயலாளர் வைத்திலிங்கத்திடமே பேசினோம்.
‘‘ஆளும் கட்சியின் போலீஸ் அ.தி.மு.க.வின் மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் துரை. செந்தில் மீது பொய்யான புகார்களை ஜோடிக்-கிறது. இதனால்தான் கண்டன ஆர்ப்-பாட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். ஆனால் சிலரது சூழ்ச்சியால் தலைமை ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்துவிட்டது.
முத்தரையர்களுக்கு நாங்கள் எப்போதும் எதிராக நடந்ததில்லை. அதற்காக போலீஸின் பொய் புகார்களையும் சகித்துக்கொள்ள முடியாது. இதே கோரிக்கைகளுடன் இன்னும் சில கோரிக்கைகளையும் சேர்த்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்-பாட்டத்தை மீண்டும் நடத்தத்தான் போகிறோம்’’ என்றார் வைத்திலிங்கம்.
பட்டுக்கோட்டை ஆர்ப்பாட்டத்தை மையமாக வைத்து முத்தரையர்களுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே உரசல் உண்டாகியிருப்பது என்னவோ உண்மை!
ராம்
நன்றி: தமிழக அரசியல்
இந்த பதிவினைக் காண தமிழக அரசியல் இதழின் கிழ்க்கண்ட லிங்கில் செல்லவும் http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=2169&rid=98
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக