
திருச்சி தேவர்ஹாலில் கூட்டுறவுத் துறையின் சார்பில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஜனவரி 5-ம் தேதி புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழாவுக்கு முதலில் வந்து விட்ட வனத் துறை அமைச்சர் செல்வராஜ், காத்திருக்கும் நேரத்தில் கண்காட்சியை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த அமைச்சர் நேரு நேரடியாக கருத்தரங்கம் நடக்கும் இடத்துக்குச் சென்று விட்டார். அங்கிருந்த அதிகாரிகள், ‘கண்காட்சியை திறந்த பிறகுதான் சார் கருத்தரங்கம் தொடங்குது’ என்று கூறி கண்காட்சி நடைபெறும் இடத்துக்கு நேருவை அழைத்து வந்தனர். நேரு கண்காட்சி அரங்குக்கு வரும்போது, செல்வராஜ் கருத்தரங்கம் நடைபெறும் இடத்துக்குச் சென்று விட்டார்.
அவரிடமும் அதே பதிலை சொன்ன அதிகாரிகள் கண்காட்சி அரங்குக்கு செல்வராஜை அழைத்து வந்தனர். அமைச்சர் செல்வராஜ் வருவதற்குள் அமைச்சர் நேரு, கண்காட்சி அரங்கினை ரிப்பன் வெட்டி திறந்தார்.
இதைக் கண்ட செல்வராஜ் உச்சகட்ட கோபத்தில் அமைச்சர் நேருவை பார்த்து, “என்ன பாத்தா உங்களுக்கு எப்படிங்க தெரியுது? தொடர்ந்து இப்படி அவமானப்படுத்துறீங்க. உங்களுக்கு முன்னாடியே வந்த எனக்கு கண்காட்சியை திறக்கத் தெரியாதா? நான் உங்களுக்காக காத்திருந்தேன்ல. நான் முன்னாடியே வந்ததை அதிகாரிங்க உங்க கிட்ட சொல்லலியா? ஏன் இப்படி பண்றீங்க? நானும் ஒரு அமைச்சர்தான்கிறது உங்களுக்கு தெரியாதா?’’ என்று எகிறினார்.
இதைக் கேட்ட நேரு முகம் வெளிறிப் போய் நிற்க... செல்வராஜின் ஆதரவாளர்களும் ஏகத்துக்கும் சவுண்டு விட்டனர். இதனால் கடுப்பான நேரு, செல்வராஜின் ஆதரவாளர்களைப் பார்த்து, ‘‘இப்ப என்ன திருப்பி திறக்கணுமா? வாங்க...’’ என்றவர், அதிகாரிகளைப் பார்த்து... ‘‘இந்த ரிப்பனை கட்டுங்கய்யா’’ என்று உத்தரவிட்டார். தொடர்ந்து கண்காட்சி திறப்பு விழா 2-ம் முறையாக நடந்தது.
திருச்சி அரசு விழாக்களில் செல்வராஜுக்கு இப்படி நடப்பது புதிது இல்லை. எப்போதுமே டேக் இட் ஈஸி பாலிஸியாக எடுத்துக்கொள்ளும் ‘வனத்துறை’ தேர்தல் நேரத்தில் ‘சினத்துறை’யாக மாறிவிட்டார்.
‘‘நடக்குறதோ கூட்டுறவுத் துறையோட நிகழ்ச்சி. கூட்டா வந்துட்டுப் போவாங்கனு பார்த்தா, இப்படி மோதிக்கிறாங்களே...’’ என அதிகாரிகளே வருத்தப்-பட்டுக்-கொண்டனர்.
அறிவாலயத்தில் நடந்த திருச்சி மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் நேருவுக்கும், செல்வ-ராஜுக்குமான பனிப்போர் வெடித்து ஓய்ந்த நிலையில்... நேருவும் செல்வராஜும் நேருக்கு நேர் மோதிக் கொண்டிருப்பது திருச்சி தி.மு.க.வில் அதிர்-வலைகளைக் கிளப்பியுள்ளது.
படம்: ஆர்.பி.
சுந்தர.குமரேசன்
தமிழக அரசியல் இதழின் பக்கத்திற்கு செல்ல இந்த இணைப்பை அழுத்தவும்
http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=2216&rid=100
இதுதான் பொதுவாக நமது சமுதாயத்திற்கு அரசியல் கட்சிகளிடம் (குறிப்பாக திமுக) இருக்கும் மரியாதை...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக