
தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 10 தொகுதிகள் இருந்தன. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு திருவோணம், வலங்கைமான் ஆகிய தொகுதிகள் நீக்கப்பட்டு விட்டன. ஆனால் புதிதாக வேறு எந்த தொகுதிகளும் சேர்க்கப்பட வில்லை. தற்போது தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 8 தொகுதிகள் உள்ளன. தொகுதி சீரமைப்புக்கு பின்னர் தொகுதி வரிசையில் பேராவூரணி 177-வது இடத்தில் உள்ளது. இந்த தொகுதியில் தற்போது நீக்கப்பட்ட திருவோணம் தொகுதியில் இருந்து 9 ஊராட்சிகள் பேராவூரணியுடன் இணைக்கப்பட்டு உள்ளது. மேலும் பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் 13 ஊராட்சிகள் இந்த தொகுதியில் இருந்தது. அதில் தற்போது 9 ஊராட்சிகள் பட்டுக்கோட்டை தொகுதியுடனே இணைக்கப்பட்டு விட்டன. இது தவிர சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் 36 ஊராட்சிகளும், பேராவூரணி தொகுதியில் 26 ஊராட்சிகளும் இந்த தொகுதியில் உள்ளன. பேராவூரணி தொகுதியில் 131 இடங்களில் 213 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண் வாக்காளர்கள் 84 ஆயிரத்து 35 ஆகும். பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 410 ஆகும். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 420 ஆகும். ஆண் வாக்காளர்களை விட 1384 பெண் வாக்காளர்களை அதிகம் பெற்றுள்ளது பேராவூரணி தொகுதி. இந்த தொகுதியில் முத்தரையர், அம்பலக்காரர், முக்குலத்தோர், யாதவர், ஆதி திராவிடர்கள், முஸ்லிம்கள் என அனைத்து தரப்பினும் உள்ளனர். ஆனால் பேராவூரணி தொகுதியை பொறுத்தவரை வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது முத்தரையர் இன மக்களே. பொதுவாக இந்த தொகுதியை பொறுத்தவரை ஆளும் கட்சிக்கு எதிரானவர்களே வெற்றிபெறுவார்கள் என்று கூறப்படுவது உண்டு. அதன்படி கடந்த 2006 தேர்தலில் இந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. வேட்பாளராக திருஞானசம்பந்தம் என்பவர் போட்டியிட்டார். ஆனால் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வீரகபிலன் என்பவர் வெற்றி பெற்றார். பொதுவாக இந்த தொகுதியில் ஆளும் கட்சிக்கு எதிரானவர்களே வெற்றி பெறுவதால் வளர்ச்சி பணிகள் தாமதமாகத்தான் நடைபெறுகின்றன. அந்தந்த எம்.எல்.ஏ. தொகுதி நிதி மற்றும் ஊராட்சி, பேரூராட்சி நிதிகள்மூலம் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. மற்றபடி பெரிய அளவில் எந்த வளர்ச்சிப்பணிகளும் நடைபெற வில்லை. பேராவூரணில் கோர்ட்டு அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் அதற்கான நிதி ஒதுக்கப்படாமல் எந்த வேலையும் நடைபெற வில்லை. இந்த பகுதி முழுக்க, முழுக்க விவசாயம் சார்ந்த பகுதி ஆகும். தென்னையும் அதிக அளவில் பயிரிடப்பட்டு உள்ளன. தென்னை விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி கோரிக்கை விடுத்ததின் விளைவாக தற்போது தான் தென்னை வாரியம் அமைக்கப்பட்டு உள்ளது. அதுவும் கூட்டம் நடத்தப்பட்டதுடன் சரி எந்தவித சலுகையும் இதுவரை வழங்கப்படவில்லை என்பதும் அந்த பகுதி மக்களின் கருத்தாக உள்ளது. இந்த தொகுதி தற்போது வரை 10 தேர்தல்களை சந்தித்துள்ளது. தற்போது 11-வது முறையாக தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த தொகுதியில் தற்போது மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இங்கு தி.மு.க. ஒரு முறையும், சுயேச்சை ஒரு முறையும், அ.தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ் 2 முறையும், த.மா.கா. 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
மாவட்டம் :தஞ்சாவூர் மொத்த வாக்காளர்கள்:169420 ஆண் வாக்காளர்கள் :84018 பெண் வாக்காளர்கள் :85402 திருநங்கை வாக்காளர்கள்:0
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக