
திருச்சி: திருச்சி மேற்கு தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் முக்கிய கூட்டணிக் கட்சிகளை கழட்டிவிட்டு, தனித்து களமிறங்கிய அ.தி.மு.க., 14 ஆயிரத்து, 684 ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலுடன் ஒப்பிடும் போது, தி.மு.க.,வின் ஓட்டுகள் வெகுவாகச் சரிந்துள்ளது. அ.தி.மு.க.,வின் வெற்றி வித்தியாசம் மேலும் அதிகரித்துள்ளது.
தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த மரியம்பிச்சை, சாலை விபத்தில் இறந்ததால் காலியான மேற்கு சட்டசபைத் தொகுதிக்கு, கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., பரஞ்ஜோதியும், தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் நேருவும் போட்டியிட்டனர். இவர்கள் தவிர, இந்திய ஜனநாயக கட்சி உட்பட, 16 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது முன்னாள் அமைச்சர் நேரு, நில அபகரிப்பு வழக்கில் சிக்கி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனால், அவர் சார்பில், முன்னாள் அமைச்சர் வேலு தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தான், நேருவுக்கான தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டது. அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதிக்காக, 15க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் திருச்சியில் தங்கி தேர்தல் பணியாற்றினர்.
ஓட்டுப்பதிவு குறைவு: திருச்சி மேற்கு தொகுதியில், 2 லட்சத்து, 8,491 வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றிருந்தனர். இவர்களில், 1 லட்சத்து, 27 ஆயிரத்து, 433 பேர் ஓட்டு போட்டனர். கடந்த சட்டசபைத் தேர்தலை விட, இடைத்தேர்தலில் 14 சதவீதம் ஓட்டுகள் குறைவாக பதிவானது. இதனால், தேர்தலில் யார் வெற்றி பெறுவார்? என்று கணிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. பதிவான ஓட்டுகள், பஞ்சப்பூர் சாரநாதன் இன்ஜினியரிங் கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டன.
மொத்தம், 18 சுற்றுகள் அடங்கிய ஓட்டு எண்ணிக்கையில், முதல் சுற்று முதலே அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதி முன்னிலை வகித்தார். ஒவ்வொரு சுற்றிலும், 500 முதல், 1,000 ஓட்டுகள் அதிகம் வாங்கினார். 12 சுற்றுகள் முடிந்த நிலையிலேயே, அ.தி.மு.க., வேட்பாளர், 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகளைப் பெற்று வெற்றியை உறுதி செய்தார். இறுதியாக அவர், 14 ஆயிரத்து, 684 ஓட்டுகள் வித்தியாசத்தில், தி.மு.க., வேட்பாளர் நேருவை தோற்கடித்து, திருச்சி மேற்கு தொகுதியின் புதிய எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார்.
பதிவான ஓட்டுகளில் பரஞ்ஜோதி, 69 ஆயிரத்து, 29 ஓட்டுகளையும், தி.மு.க., வேட்பாளர் நேரு, 54 ஆயிரத்து, 345 ஓட்டுகளையும் பெற்றுள்ளனர்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் மரியம்பிச்சை, தி.மு.க., வேட்பாளர் நேருவை விட 7,179 ஓட்டுகள் மட்டுமே அதிகம் பெற்று வெற்றி பெற்றார். ஓட்டு வித்தியாசம் தற்போது இரு மடங்காகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓட்டுப்பதிவு குறைந்துள்ள நிலையில், பதிவாகியுள்ள ஓட்டுகளை வைத்து பார்க்கும் போது, தி.மு.க.,வுக்கு ஓட்டுகள் வெகுவாகச் சரிந்துள்ளது தெரிகிறது. தி.மு.க., வேட்பாளர் நேரு, கடந்த தேர்தலில் பெற்ற ஓட்டுகளை விட, 15 ஆயிரத்து, 968 ஓட்டுகள் குறைவாக பெற்றுள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியிலிருந்த, தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் விலகியும், அ.தி.மு.க.,வின் வெற்றி எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பது அமோக வெற்றி மூலம் வெளிப்பட்டுள்ளது.
"முதல்வர் திட்டங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றி' : ""தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் கிடைத்த வெற்றி,'' என்று மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதி தெரிவித்தார். திருச்சி மேற்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட பரஞ்ஜோதி, 14 ஆயிரத்து, 684 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்றதுக்கான சான்றிதழைப் பெற கட்சியினருடன் சாரநாதன் கல்லூரிக்கு வந்த பரஞ்ஜோதி, நிருபர்களிடம் கூறியதாவது: இடைத்தேர்தல் வெற்றி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றியாகும். அவருடைய திட்டங்களுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் கிடைத்த வெற்றி. மேற்கு தொகுதியின் வளர்ச்சிப் பணிகளை, முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனை படியும், வழிகாட்டுதல் படியும் செய்வேன். இடைத்தேர்தலில் என்னுடைய வெற்றிக்கு உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கும், ஓட்டளித்த வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பரஞ்ஜோதி கூறினார்.
1 கருத்து:
ஓட்டுப் போட்ட முத்தரையர் வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.. !!
செல்வா முத்தரையர்,
சிவநாயக்கன் பட்டி,
நாமக்கல் மாவட்டம்.,
கருத்துரையிடுக