

‘‘24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளைப் பிடித்து விடுவோம்”
-முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்ட முத்தரையர் சமூக முக்கியப் பிரமுகருமான வெங்கடாசலம் தன் வீட்டிலேயே கொடூரமாகக் கொல்லப்பட்ட அக்டோபர் 7-ம் தேதி இப்படிச் சொன்னது போலீஸ்.
ஆனால்... மூன்று நாட்கள் முழுதாய் முடிந்த பின்னும் போலீஸார் யாரையும் கைது செய்யாத நிலையில்... 11-ம் தேதி மாலை மதுரை கோர்ட்டில் சரண்டராகி இருக்கிறார் கணேசன் என்பவர்.


வெங்கடாசலம் கொலையால் வெகுண்டுபோயிருக்கும் முத்தரையர் இன பிரமுகர்களோ... ‘‘இந்த கணேசன் அம்புதான். அவன் ஒரு வெறும்பய. ஆனால் அவனை ஏவி விட்டவங்களைப் பிடிச்சே தீரணும்’’ என குமுறிக்கொண்டிருக்கிறார்கள்.
கொலையை அடுத்து கலவரக்காடாகிக் கிடக்கும் ஆலங்குடி, வடகாடு வட்டாரங்களில் பேசினோம்.
‘‘முத்தரையரினத்துக்கு ஒன்று என்றால் பார்த்துக் கொண்டு இருக்கமாட்டார் வெங்கடாசலம். அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் சரி, அமைச்சராக இருந்தபோதும் சரி... அரசியல் ரீதியாக அவருக்கு யாரும் எதிரிகள் என்று கிடையாது.
ஆனால் அரசியலோடு சேர்ந்து வெங்கடாசலம் ஊர் பிரச்னைகள் பலவற்றை பேசித் தீர்த்து வைப்பதுண்டு. அதிலும் சமீபகாலமாக ரியல் எஸ்டேட் தொழிலிலும் இவர் ஈடுபட்டு வந்தார். வெங்கடாசலம் பஞ்சாயத்து பேசி தீர்த்து வைத்த பிரச்னைகளில் பாதிக்கப்-பட்டவர்-கள்தான் அவரைத் தீர்த்துக் கட்டியிருக்க வேண்டும்’’ என்கிறார்கள்.
யார் இந்த கணேசன்? வெங்கடாசலத்தைக் கொல்ல இவருக்கு என்ன அவசியம்? இக்கொலை வழக்கின் தனிப்படை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.
“பேராவூரணி கணேசன் என அழைக்கப்படும் இந்த கணேசனின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கைகாட்டி கிராமம். சில வருடங்களுக்கு முன்பே தனது அண்ணன் மகனை கொன்று அந்த வழக்கில் சிறையில் இருந்து விட்டு வெளியே வந்தவர். அதன் பின் பேராவூணிக்கு வந்து அரிசிக் கடை நடத்தி வந்தவர்.
கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த கணேசனுக்கும் இவனது தம்பி நீலகண்டன் என்பவனுக்கும் குடும்பச் சொத்தை பிரிப்பதில் பிரச்னை ஏற்பட்டு, பஞ் சாயத்து வெங்கடாசலத்திடம் சென்றுள்ளது. இருவரையும் கடந்த மாதம் 25&ம் தேதி அழைத்துப் பேசிய வெங்கடாசலம், ‘அரிசி கடை நீலகண்டனுக்கு... வீடு கணேசனுக்கு’ எனத் தீர்ப்பு கூறியுள்ளார்.
நீலகண்டன் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர். வெங்கடா-சலத்துக்கு நெருக்கமானவரும் கூட. இதனால் வெங்கடா-சாலம் நீலகண்டனுக்கு ஆதரவாக கடையை அவருக்கு கொடுக்க பஞ்சாயத்து பண்ணியதாக ஆத்திரம் அடைந்த கணேசன், ‘உன்னைச் சும்மா விடமாட்டேன்’ என்று வெங்கடாசலத்தை மிரட்டிவிட்டுப் போயிருக்கிறார். கொலைக்குப் பின்னர் அவனைத் தேடியபோது எஸ்கேப் ஆனவர், மதுரை கோர்ட்டில் சரண்டராகிவிட்டார்’’ என்கிறார்கள் போலீஸார்.
மேலும் அவர்கள், ‘‘கொலை நடக்கும் நேரத்துக்கு சில நிமிடங்கள் முன்புதான் வெங்கடாசலத்தின் டிரைவர் அங்கிருந்து சென்றுள்ளார். சும்மா போகாமல் வெங்கடாசலத்தின் கார் சாவியை எடுத்துக்கொண்டு அவரது செல்லையும் ஸ்விட்ச் ஆப் செய்துள்ளார். தவிர, கொலைக்கு நான்கு நாட்கள் முன்புதான் ஆலங்குடி அருகே உள்ள கற்காத்தக்குடி ஊராட்சிமன்றத் தலைவர் கருப்பையா என்பவரது இடப் பிரச்னையில் வெங்கடா-சலம் பஞ்சாயத்து செய்துள்ளார். இந்தப் பஞ்சாயத்தில் கருப்பையாவுக்கு வெங்கடாசலம் மீது கடுப்பு.
கொலை நடப்பதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பு வரை வெங்கடாசலம் வீட்டில்தான் கருப்பையா பேசிக் கொண்டு இருந்துள்ளார். அவரையும் சந்தேகத்தின் பேரில் விசாரித்த-போதுதான் கணேசன் பற்றி கூறினார்’’ என்றனர் போலீஸார்.
ஆனால், போலீஸ் வட்டாரத்திலேயே மேலும் நாம் துருவியபோது, ‘கணேசன் அம்புதான்’ என்பதை உறுதி செய்கின்றனர்.
‘‘வெங்கடாசலம் இதுவரை பல பஞ்சாயத்--துகளை வெற்றிகரமாக(?) நடத்தியுள்ளார். ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன் பட்டுக்கோட்டையில் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் தலையிட்டு ஒரு பஞ்சாயத்து செய்தார் வெங்கடாசலம். அதுமுதலே அவருக்கும் வெங்கடாசலத்துக்கும் முரண்பாடுகள் முளைவிட்டன.
இன்று அந்த பெரிய குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவரின் பெண்ணைத்தான், அ.தி.மு.க.வில் சமீபத்தில் செய்திகளில் அடிபட்டவர் மணமுடித்துள்ளார். அந்த பட்டுக்கோட்டை பெரிய குடும்பத்தின் மூத்த வாரிசின் மகன் வரும் தேர்தலில் பேராவூரணி தொகுதியை குறிவைத்து களம் இறங்கினார்.
ஆனால் ‘உன் தாத்தாவையே எதிர்த்தவன் நான்... முத்தரையர் நிறைஞ்ச பேராவூரணியில நீ மல்லுக்கட்றியா?’ என அவருக்குத் தொகுதி கிடைக்காமல் செய்யும் வேலைகளில் இறங்கினாராம் வெங்கடாசலம். இதனால் கடுப்பான அந்த அ.தி.மு.க. வாரிசு தனது மாமாவோடு ஆலோசித்தார்.
இதையடுத்து, வெங்கடாசலத்தின் பஞ்சாயத்தால் பாதிக்கப்பட்ட கணேசனை வைத்தே வெங்கடாசலத்தின் கதையை முடிக்கத் திட்டமிட்டனர். இதற்கு கணேசனுடன் சிறையில் பழக்கமான திருநெல்வேலியைச் சேர்ந்த கூலிப்-படையினரை பயன்படுத்தியுள்ளனர். கணேசன் வாய் திறந்தால் இந்தக் கொலை வழக்கில் அ.தி.மு.க. புள்ளிகள் சிலரும் சிக்க வாய்ப்புள்ளது’’ என்றார்கள் அவர்கள்.
வெங்கடாசலத்துக்கு அஞ்சலி செலுத்த மகாதேவன், திவாகரன் உள்ளிட்ட சசிகலா உறவினர்-களும், அ.தி.மு.க. சார்பில் கோகுல இந்திரா, கண்ணப்பன், கு.ப.கிருஷ்ணன், அன்வர்ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் வந்தனர். ஆனால், அவர்களைப் பார்த்து என்ன எழவு வீட்லயும் அரசியல் செய்ய வந்தீங்களா?’ என கேட்டுவிட்டனர் வெங்கடாசலத்தின் ஆதரவாளர்கள்.
இந்த நிலையில், ‘‘குற்றவாளிகளுக்கு அ.தி.மு.க.வினரின் ஆதரவு உள்ளது. மேலும் கொலையாளிகள் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள்’’ போன்ற தகவல்களால் ஆலங்குடி வட்டாரத்தின் பதற்றம் விபரீத திசையில் சென்றுகொண்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக